ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை அணி, பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த பெங்களூரு அணி, சென்னை அணியின் துல்லியமான சுழற்பந்துவீச்சினால் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. கோலி (6), மொயின் அலி (9), டிவில்லியர்ஸ் (9), ஹெட்மயர் (0), ஷிவம் துபே (2), காலின் டி கிராண்ட்ஹோம் (4) என பெங்களூரு வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால், பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சென்னை அணி தரப்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங் செய்த சென்னை அணியில் வாட்சன், ராயுடு தொடக்க வீரராக களமிறங்கினர். சென்னை அணியின் யுக்தியை பெங்களூரு அணியும் தொடக்கத்தில் பயன்படுத்தினர். சஹால், மொயின் அலி ஆகியோரை பவர் பிளே ஓவரில் பந்துவீச வைத்தார் விராட் கோலி.
அதன்பலனாக, சஹாலின் பந்துவீச்சில் வாட்சன் டக் அவுட் ஆனார். பின்னர் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் அவர் 15 ரன்களை எடுத்ததன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனைப் படைத்தார்.
பின்னர், கேதர் ஜாதவ் - அம்பதி ராயுடு ஜோடி அதிரடியாக விளையாடி போட்டியை விரைவில் முடிப்பார்கள் என்று பார்த்தால், மெத்தனமாகவே ஆடிய தருணத்தில், அம்பதி ராயுடு 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஜடேஜா, கேதர் ஜாதவ் பவுண்டரிகளை விளாசாமல், ஒரு ரன், இரண்டு ரன்னாக எடுத்து ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்தனர். இறுதியில் சென்னை அணி 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 71 ரன்களை எட்டியது. இதன்மூலம், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.