ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன்,ரஹானே முதலில் பந்துவீச தீர்மானித்தார். இந்த தொடரில் இவ்விரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்தப் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவார்கள் என தெரிகிறது.
காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாமல் போன, கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் கேப்டனாக ஹைதராபாத் அணிக்கு திரும்பியுள்ளார். வார்னர் நல்ல ஃபார்மில் இருக்கும் போது, இவரது வருகை தற்போது ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை இன்னும் பலப்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அணியில் சகிப்-உல்-ஹசன், தீபக் ஹூடா ஆகியோருக்கு பதிலாக, கேன் வில்லியம்சன், ஷதாஸ் நதீம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மறுமுனையில், பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய அதே 11 வீரர்களைக் கொண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றையப் போட்டியில் களமிறங்கியுள்ளது.
அந்த அணியில் ஜாஸ் பட்லர் மிரட்டலான ஃபார்மில் இருந்தாலும், ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஃபார்ம் அவுட்டில் உள்ளது அணியின் பேட்டிங்கை பெரிதும் பலவீனம் ஆகியுள்ளது.
இந்த போட்டியில், ஹைதரபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானின் பந்துவீச்சை ராஜஸ்தான் வீரர் பட்லர் எவ்வாறு எதிர்கொள்வார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஹைதராபாத் அணி விவரம்: டேவிட் வார்னர், ஜானி பேயர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், யூசப் பதான், மணிஷ் பாண்டே, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், ஷதாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்: ரஹானே, ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்ப கவுதம், ஆர்ச்சர், ஜெய்தேவ் உனாத்கட், ஸ்ரேயாஸ் கோபால், தவால் குல்கர்னி
ஐபிஎல் கிரிக்கெட்டில், இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 9 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் ஹைதராபாத் அணி 5 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.