இன்றைய ஐபிஎல் போட்டிகள் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் முதல் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி, ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சில் திணறியதால் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பாக ரபாடா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. தொடக்க வீரர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் களம் புகுந்தார். பின்னர், அதே ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பெங்களூரு விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் தவறவிட, டெல்லி அணி சுதாரித்துக் கொண்டது.
இதனையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா-வின் அடியில் பொறி கிளம்பியது. டிம் செளதி வீசிய மூன்றாவது ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை விளாசி பெங்களூரு அணியின் பந்துவீச்சைப் பதம் பார்த்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், ப்ரித்வி ஷா 28 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஸ்ரேயஸ் ஐயர் - இங்ரம் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14-வது ஓவரில் இங்ரம் 22 ரன்களில் ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் களமிறங்கினார். இதனிடையே, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த இணை டெல்லி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது.
டெல்லி அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 67 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த மோரிஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்த ஓவரில் பந்த் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது. பின்னர் 18.5 ஓவரில் அக்ஸர் படேல் பவுண்டரி அடித்து டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். டெல்லி அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணிக்கு இது தொடர்ச்சியாக ஆறாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.