ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று சென்னையில் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தளபதி கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் வலுவான அணி என்பதால், இவர்கள் நேருக்கு நேர் மோதும் போட்டி எப்போதும் அனல் பறக்கும் விதமாகவே இருக்கும்.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சென்னை அணி 14 வெற்றிகளும், பெங்களூரு ஏழுவெற்றிகளும் பெற்றுள்ளன. ஒரேயொரு போட்டி எந்தமுடிவும் இல்லாமல் முடிந்துள்ளது.
அதைத்தவிர, பெங்களூரு அணி 2014இல்தான் சென்னை அணியை இறுதியாக வீழ்த்தியது. அதுமட்டுமின்றி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் இவ்விரு அணிகள் ஏழுமுறை பலப்பரீட்சை நடத்தியதில், பெங்களூரு அணி கடைசியாக 2008இல்தான் வெற்றிபெற்றது. ஏனைய போட்டிகள் அனைத்தும் சென்னை அணியே வெற்றிவாகை சூடியது.
இதனால், நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூரு அணி சென்னையை வீழ்த்துமா, அல்லது சென்னையின் ஆதிக்கம் தொடருமா என்பது இன்றையப் போட்டியில் தெரிந்துவிடும்.
இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று இரவு எட்டு மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.