ஐபிஎல் 12ஆவது சீசனின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 70 ரன்களுக்கு சுருண்டது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சின்ன தல சுரேஷ் ரெய்னா, கிங் கோலி ஆகியோருக்கு இடையே முதலில் 5000 ரன்களை யார் அடிப்பார்கள் என்ற பெரும் போட்டி நிலவி வந்தது. ஆனால், விராட் கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழந்ததால், இந்த சாதனையை படைக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதைத்தொடர்ந்து, 71 ரன் இலக்குடன் ஆடி வரும் சென்னை அணி 8 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. வாட்சன் டக் அவுட் உடன் நடையைக் கட்டியதால், சின்ன தல ரெய்னா மூன்றாவது வீரராக களமிறங்கினார்.
ராயுடுவுடன் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ரெய்னா, மூன்று பவுண்டரிகளை விளாசினார். பின்னர் உமேஷ் யாதவ் வீசிய ஆட்டத்தின் 9 ஆவது ஓவரில், ஒரு ரன் எடுத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். தனது 177ஆவது ஐபிஎல் போட்டியில் அவர் இச்சாதனையை எட்டியுள்ளார். தொடர்ந்து, நிதானமாக ஆடிய ரெய்னா 19 ரன்களில் மொயின் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.