ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக ஆடி வரும் உமேஷ் யாதவ், இந்த ஆண்டு தொடரின் தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சில் சொதப்பி வந்தார். முக்கியமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் 24 ரன்கள் கொடுத்திருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் இந்திய அணிக்கு ஆடிய டிண்டாவுடன் உமேஷ் யாதவை ஒப்பிட்டு இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இதனையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு அணியின் வெற்றிக்கு உமேஷ் யாதவ் முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில், ரசிகர்களின் கிண்டலுக்கு பதிலளிக்கும் விதமாக, உமேஷ் யாதவின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களிடம் என்ன சொன்னீர்கள்? டிண்டாவின் அகாடமி? என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த ட்வீட்டையும் ஆர்.சி.பி. நீக்கியது.
தற்போது அசோக் டிண்டா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளார். அதனுடன், வெறுப்பாளர்கள் எனது புள்ளி விவரங்களை பாருங்கள். நீங்கள் பார்ப்பது உண்மையல்ல. எனவே உங்கள் பேச்சுக்களை நிறுத்தி கொள்ளுங்கள் எனப் பதிவிட்டு ஆர்.சி.பி. அணிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.