சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை,வெளிச்சமின்மை ஆகிய காரணங்களால் ஆட்டம் பலமுறை தடைப்பட்டது. இதனால், இறுதிப்போட்டிக்கு முடிவை அறிய ஆறாவது நாளான (ரிசர்வ் டே) இன்றும் (ஜுன் 23) விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
வீழ்ச்சியின் தொடக்கம்
இன்றைய ஆட்டத்தின் முதல் செஷன் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்து 98 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.இதையடுத்து, களமிறங்கிய பந்த் - ஜடேஜா இணை இரண்டாம் செஷனை தொடங்கியது.
இப்போதாவது இந்தியா அதிரடியை ஆரம்பிக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜடேஜா 16(49) ரன்களில் வாக்னரிடம் விக்கெட்டை இழக்க, அவரை தொடர்ந்து ரிஷப் பந்தும் 41(88) ரன்களில் போல்ட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
முடிந்தது இந்திய இன்னிங்ஸ்
அதன்பின் வழக்கம்போல், இந்திய டெயிலெண்டர்கள் சீட்டுக்கட்டுகளாக சரிய, இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களை எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில், சவுத்தி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும், ஜேமீசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
சாம்பியன்ஷிப் பட்டம் யாருக்கு?
இதன்மூலம், நியூசிலாந்து அணியில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கிலும், இந்திய அணி மீதமுள்ள 53 ஓவர்களில் பத்து விக்கெட்டுகளையும் எடுத்தால் வெற்றி நோக்கிலும் விளையாட தயாராக உள்ளது.
இதையும் படிங்க: WTC FINAL: டிராவாக்குமா இந்தியா; கைவிட்டார் கோலி