கொழும்பு (இலங்கை): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20, ஒருநாள் தொடர்களை விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு டி20 போட்டிகளில் தோல்வியுற்ற இலங்கை அணி, நேற்று (ஜுன் 27) நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-3 என்ற கணக்கில் இலங்கை அணி மிக மோசமாக இழந்துள்ளது.
போட்டிக்கு பின்...
இந்நிலையில் நேற்றிரவு போட்டிக்கு பின் இலங்கை பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ், விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா, தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இங்கிலாந்தின் டர்ஹாம் நகரின் சாலையில் சுற்றித்திரிந்த காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இவர்கள் மூவரும் நேற்றைய போட்டியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு திரும்ப உத்தரவு
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பொதுச்செயலாளர் மோகன் டி சில்வா கூறுகையில்,"குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்க குணதிலக்க ஆகியோர் பயோ-பபுளின் விதிமுறைகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு அவர்களை இடைநீக்கம் செய்து முடிவெடுத்துள்ளது. மேலும், அவர்களை உடனடியாக நாடு திரும்பும்படி உத்தரவிட்டுள்ளது" என்றார்.
மேலும், அந்த காணொலி குறித்த கேள்விக்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா,"அந்த காணொலி குறித்தும், விதிமுறைகளை மீறியது குறித்தும் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
மூத்தோரின் கண்டனங்கள்
இலங்கை வீரர்களின் இந்தச் செயலுக்கு, இலங்கை அணியின் மூத்த வீரர்களான சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், ரோஷன் மாகாநாமா, ஹஷன் திலகரத்னே, திலகரத்னே தில்ஷான் ஆகியோர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இலங்கை அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியை நாளை (ஜுன் 29) விளையாடுகிறது.
மேலும், இந்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் இலங்கை அணி நேரடியாக தகுதிபெறவில்லை. இதனால் ஓம்ன், அயர்லாந்து அணிகளை உலக கோப்பை தகுதிச்சுற்றில் சந்தித்து, வெற்றிபெற வேண்டிய பரிதாப நிலையில் இலங்கை அணி இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
இதையும் படிங்க: இலங்கைக்கு புறப்பட்டது தவான் - டிராவிட் இந்திய இளம் படை!