ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற டிச.17ஆம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், இந்தியாவின் புஜாரா எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடமல் இருந்தாலும், அவர் மனதளவில் வலிமை படைத்தவர் என்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹெய்டன், “ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டிகளில் புஜாராவின் ஆட்டத்தை பார்க்கும் போது, அவரது விக்கெட்டை கைப்பற்ற எங்களுக்கு அதிக நேரம் இருப்பதாக தோன்றும். ஏனெனில் அவர் குறைந்த ஸ்டிரைக்ரேட்டில் விளையாடினாலும், எங்களை பலமுறை நிலை குழையச் செய்துள்ளார்.
தற்போதுள்ள தலைமுறையைச் சேர்ந்த வீரர்களின் ஸ்டிரைக் ரேட்டை கண்டு நாங்கள் பாராட்டியுள்ளோம். ஆனால் அதேசமயம் ஒருசிலரது ஸ்டிரைக் ரேட் 45க்கும் குறைவாக இருக்கும். அந்த வரிசையில் புஜாராவும் ஒருவர். ஆனால் அவரை வீழ்த்துவதென்பது அவ்வளவு எளிதில் நடக்காத ஒன்று.
ஏனெனில் அவர் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் மனதளவில் வலிமைப்பெற்றவர். இதனால் அவர் மற்ற கிரிக்கெட் வீரர்களிடமிருந்து மாறுபட்டவர் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர் எப்போது பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சவாலாக இருந்துவருகிறார்” என்று தெரிவித்தார்.
இந்திய அணிக்காக 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, இதுவரை 5,840 ரன்களை குவித்துள்ளார். இதில் 18 சதம், 25 அரை சதம் அடங்கும்.
இதையும் படிங்க:பயிற்சி ஆட்டத்தில் சதமடித்தது எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது - ரிஷப் பந்த்