தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நடராஜன் நேற்று, தனது மகள் ஹன்விகாவின் ஆறுமாத பிறந்தநாள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இளவரசிக்கு அரை பிறந்தநாள்
அதில், “நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது எங்கள் இளவரசி பிறந்தார். இன்று அவருக்கு வயது 6 மாதம் ஆகிறது. வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த நேரம் விலைமதிப்பற்றது. எங்கள் இளவரசிக்கு ஹாஃப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காயத்திலிருந்து குணமடைந்தார்
சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த அவர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
பெயர் இல்லாத அறிவிப்பு
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் காயம் காரணமாக தமிழ்நாடு வீரர் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.