மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
அதேநேரம் அதற்கு நேர் எதிராக இலங்கை அணி உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு உலக கோப்பையில் 2வது இடத்தை பிடித்த இலங்கை அணி நடப்பு சீசனில் இதுவரை 2 வெற்றிகள் மட்டுமே பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் தொடக்க வீரர் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் பொறுப்பை உணர்ந்து விளையாடிய சூர்யகுமார் யாதவ் அணி 200 ரன்களை கடக்க பெரிதும் உதவினார். அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தரமான நிலையில் உள்ளனர்.
அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் முகமது சிராஜும் செயல்பட்டு வருகிறார். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் அனைத்து வீரர்களும் திறம்பட செயல்படும் பட்சத்தில் அது இலங்கை அணிக்கு கடும் சவால் அளிக்கக் கூடியதாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இலங்கை அணியை பொறுத்தவரை காயம் பெரும் தலைவலியாக உள்ளது. இதுவரை அந்த அணியில் கேப்டன் தசுன் சனகா உள்பட இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர். கடைசியாக புனேவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இலங்கை படுதோல்வி அடைந்தது.
அதற்கு முந்தைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வென்று இருந்த போதிலும், அந்த வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பயன்பெறவில்லை என்று தான் கூற வேண்டும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர் பதும் நிசங்கா, கேப்டன் குசல் மென்டிஸ் உள்ளிட்டோரின் ஆட்டத்தை தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சுலபமாக ஆட்டமிழந்து வெளியேறினர். ஏறக்குறைய இலங்கை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு சந்தேகம் தான் என்றாலும் ஆறுதல் வெற்றிகளுடனாவது சொந்த ஊர் செல்ல விரும்பும் என்பதால் இந்திய அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு :
இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.
இலங்கை: பதும் நிசங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மத்தியூஸ், மஹேஷ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க.
இதையும் படிங்க : NZ Vs SA: மகாராஜ், ஜான்சன் பந்துவீச்சில் சுருண்ட நியூசிலாந்து.. 190 ரன்களில் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி!