க்கெபெர்ஹா: உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று (பிப். 20) அயர்லாந்து அணி உடன் மோதிய இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 156 ரன்கள் வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால், டிஎல்எஸ் முறைப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி செயின்ட் ஜார்ஜ் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 87 ரன்களை எடுத்தார். பந்துவீச்சில் அயர்லாந்து கேப்டன் லாரா டெலானி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அந்த வகையில், 156 ரன்கள் வெற்றி இலக்குடன் அயர்லாந்து பேட்டர்கள் களமிறங்கினர்.8.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக கேபி லூயிஸ் 25 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வந்த லாரா டெலானி 20 பந்துகளுக்கு 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்படும் நிலையில், திடீரென மழைக்குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால், டிஎல்எஸ் முறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வெற்றியைத்தொடர்ந்து, இந்திய அணி 6 புள்ளிகளுடன் பி பிரிவில் முதல் இடத்தை பிடித்து, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம் அணிகளும். பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2023: முழு அட்டவணை, வீரர்கள் பட்டியல்