ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்ற நிலையில், வரும் 7 ஆம் தேதி சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய உமேஷ் யாதவ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, யாதவ்வுக்கு பதில் இந்திய அணியில் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்துவரும் தமிழ்நாடு வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெட் பவுலராக தொடரை தொடங்கிய 29 வயதான நடராஜன், பின்னர், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் சேர்க்கப்பட்டார். இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடிய நடராஜன் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய முகமது ஷமிக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே, இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.