ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி நவ. 27ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.
இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் கூறுகையில், ''ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் கிளாஸிக் வீரர். தொடக்க வீரராக களமிறங்க தொடர்ந்து கன்சிஸ்டன்ட்டாக ரன்கள் சேர்க்கக் கூடியவர். அதனால் அவர் எங்களுக்கு எதிரான தொடரில் ஆடவில்லை என்றால், அது சாதகமானதுதான்.
ஆனால் அவர் இல்லை என்றாலும், இந்திய அணி அவருக்கான சரியான மாற்று வீரரை தன்னகத்தில் கொண்டுள்ளது. கே.எல். ராகுல் ரோஹித்தின் இடத்தை நிச்சயம் நிரப்புவார். ஐபிஎல் தொடரின்போது எப்படி ஆடினார் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறோம். தொடக்க வீரராக களமிறங்குகிறாரா அல்லது மிடில் ஆர்டரில் களமிறங்குகிறாரா என்பது தெரியாது. ஆனால் அவர் நிச்சயம் சிறந்த வீரர்தான்'' என்றார்.
ரோஹித் ஷர்மா அணியில் சேர்க்கப்படாததால், தொடக்க வீரராக மயாங்க் அகர்வால் களமிறங்குவார் எனத் தெரிகிறது. அதேபோல் கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோருடன் கிங்ஸ் லெவன் அணிக்காக மேக்ஸ்வெல் ஆடினார்.
அதைப்பற்றி அவர் கூறுகையில், ''மயாங்க் - ராகுல் இருவரும் நான் சந்தித்த சிறந்த நண்பர்கள். அவர்களைப் போல் நான் வேறு யாரையும் சந்தித்ததே இல்லை. அவர்களுடன் ஓய்வறையை பகிர்ந்தது மறக்க முடியாத அனுபவம். அவர்களால் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ரன்கள் சேர்க்க முடியும். அதேபோல் அவர்களுக்குப் பேட்டிங்கில் பனவீனம் என்பது மிகவும் குறைவு.
டி20 போட்டிகளோடு ஒப்பிடும்போது ஒருநாள் போட்டிகள் என்பது வேறு மாதிரி இருக்கும். எங்கள் மைதானத்தின் தன்மைகள், பந்துவீச்சாளர்கள் மூலம் நிச்சயம் அவர்களுக்கு ப்ரஷர் கொடுப்போம். ஆனால் அவர்களிடம் நல்ல வீரர்கள் உள்ளனர்.
இந்திய அணியின் பந்துவீச்சிலும் இப்போதும் வேகம் கூடியுள்ளது. முகமது ஷமியுடன் டெல்லி, பஞ்சாப் அணியில் இருந்தபோது ஆடியுள்ளேன். அவரின் திறமையைப் பற்றி நன்கு அறிவேன். அவரால் புதிய பந்திலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி சிறப்பாகப் பந்துவீச முடியும்.
எங்கள் அணியைப் பொறுத்தவரையில் நானும், ஸ்டோய்னிஸும் இடம்பெறுவோம். இல்லையென்றால் எங்களின் இடத்தை வேறு ஆல் ரவுண்டர் நிரப்புவர். மற்ற நான்கு முக்கியப் பந்துவீச்சாளர்களும் இருப்பார்கள்.
அணியில் எனது பங்கு என்பது பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பங்களிப்பதுதான். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட்டத்தை நிறைவுசெய்வதற்கான வேலை வழங்கப்பட்டது.
ஸ்டீவ் ஸ்மித் மாதிரியான வீரர் அணிக்குள் மீண்டும் வருவது நிச்சயம் ஆஸி.க்கு பெரும் சாதகம். இந்திய அணிக்கு அது பெரும் சோதனை. ஏனென்றால் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்களை எடுத்துள்ளார்'' என்றார்.
இதையும் படிங்க: தேசிய கிரிக்கெட் அகாதமிக்கு வந்தடைந்த ரோஹித்!