டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு அந்த அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான பும்ரா, முகமது ஷமியை சுழற்சி முறையில் பயண்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு மாத சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளனர். முதலில், நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 தொடர் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான பும்ரா, முகமது ஷமி ஆகியோரின் சுமையை குறைக்கும் விதமாக, அவர்களை சுழற்சி முறையில் விளையாட வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அணி நிர்வாகத் தரப்பு தகவல்கள் கூறும்போது, டெஸ்ட் தொடருக்கு இந்த இரு பவுலர்களும் முக்கியம் என்பதால் 12 நாள்களில் அடுத்தடுத்து ஆறு போட்டிகளில் அவர்களை விளையாட வைப்பது உடற்தகுதி, காயம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அத்துடன் இரண்டு மற்றும் மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் நாள்களிலேயே பயிற்சி டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.
இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் டி20 போட்டியில் விளையாடுவதென்பது அர்த்தமற்றதாக இருக்கும். ஒரு நாள் தொடரில் இவர்கள் தங்களுக்கான பங்களிப்பை அளிப்பார்கள். அடிலெய்டில் நடைபெறும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்பதால் டி20 போட்டியை பொறுத்தவரை தீபக் சாஹர், நடராஜன், நவதீப் சைனி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் கைகொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஏதுவாக பிங்க் நிற பந்தில் டிசம்பர் 11 முதல் 13 வரை பயிற்சி ஆட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பகல்-இரவு போட்டியில் ஆடுவதற்கான உத்தேச வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இதையும் படிங்க: உலகக்கோப்பைத் தகுதிச்சுற்று: கொலம்பியாவை 6-1 என வீழ்த்திய ஈக்வடார்