ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது. ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கண்களும் இந்தத் தொடர் மீது தான் திரும்பியுள்ளது.
கடந்த முறை இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட போது களத்தில் பல வார்த்தை போர்களும் ஏற்பட்டது. அதேபோல் இம்முறை விராட் கோலி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதைப்பற்றி ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், '' விராட் கோலியை பற்றி என்னிடம் அதிகம் கேட்கப்படுகிறது. எனக்கு அவர் மற்றொரு வீரர். அவ்வளவு தான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவரோடு எனக்கு எந்த நட்புறவும் இல்லை. டாஸின் போது அவரை சந்திப்பேன். அவருக்கு எதிராக ஆடுவேன்.
அவரைப் பற்றி இருவிதமான கருத்துக்கள் உள்ளது. அவரை ஆஸ்திரேலிய மக்கள் பலரும் வெறுக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட் ரசிகர்களாக அவரை பலரும் ரசிக்கிறார்கள். அவர் பேட்டிங் ஆடுவது எப்போதும் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் அவர் பெரிதாக ஸ்கோர் அடிப்பது பிடிக்காது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான போட்டி எப்போதும் பரபரப்பாக தான் இருக்கும். எனக்கும் விராட் கோலிக்கும் இடையே நில நேரங்களில் வாரத்தைகளால் மோதல் வரும். அப்போது அவரும் கேப்டன், நானும் கேப்டன் என்பதால், வேறு வழியில்லை. ஆனால் அது ஒருபோதும் எல்லை மீறியதேயில்லை.
ஒரு அணியின் தலைசிறந்த வீரர் களத்தில் இருக்கிறார் என்றால், அவர் விக்கெட்டினை வீழ்த்த முயற்சிப்போம். இவர் மட்டுமல்ல, இங்கிலாந்து அணியுடன் ஆடும்போது ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் களமிறங்கும்போதும் இப்படி தான் பரபரப்பு இருக்கும்.
இந்தத் தொடரில் ஆடுவதற்காக அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். கடந்த முறை எங்கள் மண்ணில் வைத்து எங்களை வீழ்த்தியிருக்கிறார்கள். அதனால் இரு நாடுகளுக்கும் இடையே ரைவல்ரி அதிகமாக இருக்கிறது'' என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் 10 அணிகள்? பிசிசிஐ கூட்டத்தில் இறுதி முடிவு