கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில், ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. அப்போட்டி சென்னையில் நடக்கிறது.
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகள் 7 முறை மோதியுள்ளன. இந்தியா அணி உலக கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
1992 மற்றும் 2007 ஆகிய இரண்டு உலகக் கோப்பையில் மட்டும் இரு அணிகளும் முதல் சுற்றில் வெளியேறியதால் மோதவில்லை. இந்தியா, டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தானுடன் 2021ஆம் ஆண்டு தவிர, மோதிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளது. கடைசியாக 50 ஓவர் உலகக் கோப்பை 2019இல் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி இங்கிலாந்து ஓல்டு டிராஃபோர்டில் நடந்தது.
அப்போது முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். இமாலய இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான் அணி மழை குறுக்கிட்டதால் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இந்தியா அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 89 ரன்களில் வெற்றி பெற்றது.
50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டிகளில் பெரும்பாலும் இந்தியா அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதில் மறக்க முடியாத போட்டி என்றால் 2011 அரையிறுதிப் போட்டியை கூறலாம். சச்சின் பாகிஸ்தான் பவுலர்களை நாலாபுறமும் சிதறடித்து 85 ரன்கள் எடுக்க, இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் இம்முறை வெற்றி பெற முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க வசதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: World Cup 2023: இந்தியா எதிர்கொள்ளும் போட்டிகளின் முழு விவரம்