அகமதாபாத்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று நடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தனர்.
இதனால், அந்த அணி 43.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய பந்துவீச்சு சார்பில் சஹால் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேற்கு இந்தியத்தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 57 ரன்களை எடுத்தார்.
177 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் - இஷான் இணை மிரட்டலான தொடக்கத்தை அளித்தது.
குறிப்பாக, 'ஹிட்மேன்' ரோஹித் 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்த இணை 84 ரன்கள் எடுத்தபோது, ரோஹித் 60 (51) ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோஹித் அவுட்டாகி அடுத்து களமிறங்கிய விராட் கோலி, முதலிரண்டு பந்துகளிலேயே அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரோஹித் அவுட்டான, அதே ஓவரில் விராட்டும் நடையைக்கட்டினார். பின்னர், கிஷன் 28 ரன்களிலும், ரிஷப் பந்த் 11 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
இதற்கடுத்து, களமிறங்கிய ஹூடா - சூர்யகுமார் இணை நிதான நிலைக்கே கொண்டுவந்தது. சூர்யா, சீரான இடைவேளையில் பவுண்டரிகளையும் சேர்த்தார்.
இதனால், இந்திய அணி 28 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. ரோஹித் 36, ஹூடா 24 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஒருநாள் அரங்கில், தனது 1000ஆவது போட்டியை இந்திய அணி அசத்தலாக வென்று, தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
ஆட்டநாயகனாக சஹால் தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இதே நரேந்திர மோடி மைதானத்தில் வரும் பிப்.9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!