அகமதாபாத்: 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தியாவுடன் படுதோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா, பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியைத் தோற்கடித்து லீக் சுற்றை வெற்றியுடன் முடிக்க முயற்சி செய்யும்.
அதே நேரத்தில் கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு தண்ணி காட்டிய ஆப்கானிஸ்தான் அணியும் அவ்வளவு எளிதில் தோற்காது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த உலகக் கோப்பையில் மட்டும் 4 சதங்கள் அடித்து உச்சகட்ட ஃபார்மில் உள்ள டி காக் நட்சத்திர வீரராகத் திகழ்கிறார். தென் ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் கிளாசன், மில்லர், வான் டெர் டுசென் என மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் மிடில் ஆர்டர் சோபித்தால் அணி மிக அதிகமான ரன்களை குவிக்கும்.
ஆனால், ஆப்கானிஸ்தான் அணியில் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி ஆகியோர் உள்ளதால் அவ்வளவு ரன் குவிப்பது தென் ஆப்ரிக்கா அணிக்கு அவ்வளவு எளிதல்ல. அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணியில் அனல் பறக்கும் பந்துவீச்சாளர்களான ககிஸோ ரபாடா, ஜான்சன் ஆகியோர் உள்ளனர். மேலும், தென் ஆப்பிரிக்கா அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிய பங்காற்றுவார் எனக் கூறப்படுகிறது.
அகமதாபாத் ஆடுகளத்தை வைத்துப் பார்த்தால். கோயட்ஸி, ஷம்ஸிக்கு பதில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2 இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் ரன்ரேட் 1.376 ஆக உள்ள நிலையில், நாளைய போட்டியில் வென்றால் ரன்ரேட் அதிகரிக்கும். ஆப்கானிஸ்தான் நாளைய போட்டியில் வென்று தென் ஆப்ரிக்காவின் பார்மை சிதறடிக்க முயற்சிக்கும்.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் 5 போட்டிகளில் வென்று 10 புள்ளிகள் பெற்றுள்ளது. மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி ஆப்கானிஸ்தானுக்குச் சாதகமாக அமையும் பட்சத்தில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைக்கலாம்.
ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராகிம் சத்ரான் கடந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஆப்கானிஸ்தான் பவுலர்கள் துல்லியமாகப் பந்துவீசும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு நாளைய போட்டி சவாலானதாக அமையும். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.
இதையும் படிங்க: "செமி ஃபைனலில் பாகிஸ்தான் அணி விளையாடும்" தீவிர பயிற்சிக்கு பிறகு பாக். வீரர் உசாமா மிர் நம்பிக்கை!