சென்னை: ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மைதானங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று நிறைவுற்றது. இந்த நிலையில், தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கு காண்போம்.
மேத்யூஸ் டைம்டு அவுட்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர் மேத்யூஸ் களத்திற்குள் தாமதமாக வந்த காரணத்திற்காக, ஒரு பந்து கூட ஆடாமல் அவர் டைம்டு அவுட் முறையில் வெளியேறினார். 140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் டைம்டு அவுட் மூலம் அவுட்டான முதல் வீரர் என்ற எதிர்மறை சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார், மேத்யூஸ்.
தென் ஆப்பிரிக்கா: ஐசிசி தொடர்களின் நாக் அவுட் சுற்று என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு அது இனிதான பயணமாக இருந்தது இல்லை. 5 முறை ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி உள்ள போதிலும், ஒரு முறைகூட அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை.
மேற்கிந்தியத் தீவுகள்: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்காதது இதுவே முதல் முறையாகும். 2 ஒரு நாள் மற்றும் டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு சாம்பியன் கோப்பையை வென்ற அணியால், 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஆப்கானிஸ்தான்: தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஆப்கானிஸ்தான் அணியாகும். நடப்புத் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடம் பெற்றது. இதன் மூலம் 2025ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் தொடருக்கு தேர்வாகியுள்ளது.
மேக்ஸ்வெல் :ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 128 பந்துகளில் 201 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் வீசிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார். அதே போல், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 100 ரன்களை எட்டி உலகக் கோப்பையில் அதிவேகமான சதத்தையும் பதிவு செய்தார்.
முகமது ஷமி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் மற்றும் Fastest 50 விக்கெட் என்ற மைல் கல், ஒரு உலகக் கோப்பை தொடரில் மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
விராட் கோலி: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த அரைசதம், அவரது ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடித்த 72வது அரைசதமாகும். அதேபோல், நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் அடித்த 9வது அரைசதம் இதுவாகும். மேலும், இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கோலி (765) முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6வது முறை சாம்பியன்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன்னதாக 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது.
இதையும் படிங்க: "உலகக் கோப்பையை நழுவவிட்டாலும் எங்களது ஆதரவு இந்திய அணிக்கே" - விராட் கோலியின் சகோதரி!