கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் நல்ல உடல் தகுதியுடன் உள்ளதாகவும், விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் 10 நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 10 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அணியில் களமிறங் முடியாமல் போனது.
தொடர்ந்து சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு பிசிசிஐ மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சுப்மான் கில் பூரண குணமடைந்து நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த சுப்மான் கில் வரும் 14ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ள குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சென்றதாக பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
காய்ச்சலில் இருந்து சுப்மான் கில் தேறி வருவதாகவும், ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து உள்ளதாகவும் தகவல் கூறப்பட்டு உள்ளது. இருப்பினும், அவர் சற்று சோர்வாக உள்ளதாகவும் முன்பு போன்று உடல் நிலை மாற சில காலம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி வங்காளதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்கலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது. சுப்மான் கில் பூரண குணமடைந்ததும் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : "ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன்" - சாதனை மங்கை வித்யா ராம்ராஜ்!