கொல்கத்தா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று (அக். 31) நடைபெறும் 31 லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்பதால் டாஸ் வெல்லும் அணி பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம். ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் அரையிறுதி செல்லும் அணி பட்டியலில் இருந்த பாகிஸ்தான் அணி தொடர் தேல்வியை சந்தித்து வருகிறது. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. இனி வரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும்.
வங்காளதேசம் அணியை பொறுத்தவரை முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கி அடுத்த 5 போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவியது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றிக்கா வங்காளதேசம் அணி போராடும்.
பாகிஸ்தான் அணியில் மாற்றம் இருக்குமா..?: வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், ஆல்ரவுண்டர் முகமது நவாஸ், லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாத காரணத்தால் அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த மூவருக்குப் பதிலாக ஹசன் அலி, ஃபகார் ஜமான், உசாமா மிர் ஆகியோர் அணிக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷதாப் காயம் அடைந்தார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் தான்.
கணிக்கப்பட்ட இரு அணி வீரர்கள், பாகிஸ்தான்: ஃபகார் ஜமான்/இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான்/உசாமா மிர், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம் மற்றும் ஹரிஸ் ரவுஃப்.
வங்களதேசம்: தஞ்சீத் ஹசன் ஷாகிப், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன் மிராஜ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஷோரிஃபுல் ரஹ்மான்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் ராஜினாமா? அழுத்தமா? 5 பேர் குழு விசாரணை!