சென்னை: 13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.19) அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய நேரப்படி 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கப்படவுள்ளது.
2003-2023: கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்கா, கென்யா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியும் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 359 ரனகள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை சாமளிக்க முடியாமல் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தட்டிச் சென்றது, ஆஸ்திரேலியா.
வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா? நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்று, யாராலும் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.
அதேபோல் 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, நடப்பு தொடரில் ஆரம்பத்தில் சில தோல்விகளைச் சந்தித்தாலும், பின்னர் தங்களின் அதிரடி ஆட்டத்தால் 8வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதன் பின், 2003ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்று, 140 கோடி இந்திய மக்களின் கனவை நனவாக்குமா ரோகித் சர்மா படை என்பதைப் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஹர்திக் பாண்ட்யா காயம்.. அணியில் நுழைந்த ஷமி! திருப்பிப் போட்ட தருணம்! எப்படி நடந்தது?