பெங்களூரு: 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்த பின் ஒய்வறையில் ஹர்திக் பாண்டியா, ரிஷ்ப் பண்ட் மற்றும் இந்திய அணியின் கேப்டன் தோனி ஆகியோர் கண் கலங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியிருந்தார். பொதுவாகவே வெற்றியோ, தோல்வியோ பெரிதாக எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாத தோனி கண் கலங்கியதாகக் கூறியது இந்திய ரசிகர்களைக் கலங்கச் செய்தது.
இந்த நிலையில், இது குறித்து பெங்களூருவில் ஒர் நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனி பகிர்ந்துள்ளார்; முக்கியமான போட்டிகளில் வெற்றியின் அருகில் சென்று தோல்வியைத் தழுவும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனக்கான திட்டங்களை வைத்தே நான் ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்குவேன்.
அன்றைய ஆட்டம் இந்திய அணிக்காகக் கடைசி போட்டியாக அமைந்தது. என்னைப் பொறுத்தவரை நான் அன்றே ஓய்வு பெற்று விட்டேன். ஓய்வு குறித்த அறிவிப்பை வேண்டுமானால் ஒர் ஆண்டு பின் வந்திருக்கலாம். ஆனால் அன்றைய தனமே ஓய்வு பெற்றுவிட்டேன்.
ஒவ்வொரு வீரர்களுக்கும் சில தொழில் நுட்ப சாதனங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் பயிற்சியாளரைப் பார்க்கும் போது எல்லாம் அதை நான் திருப்பி கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்தார். அவரிடம் இதற்கு மேல் எனக்கு இது தேவைப்படாது என்று எப்படி கூற முடியும். அதனாலேயே உடனடியாக ஓய்வு குறித்து அறிவிக்கவில்லை.
கடந்த 12 முதல் 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். திடீரென இனி நாட்டுக்காக விளையாடப் போவதில்லை என்ற சூழல், விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வரும். நான் ஓய்வு அறிவித்தால் அதன் பின்னர் நாட்டுக்காக விளையாடக் களமிறங்க முடியாது என தெரியும் போது அந்த உணர்வுகளுக்கு அளவே இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்; ”2011 உலகக் கோப்பையிலிருந்த இந்திய அணிக்கும் இப்போதுள்ள அணிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அந்த அணியின் ஒற்றுமை இருந்தது. அனைவருமே சச்சினுக்காகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போதுள்ள அணியைப் பற்றி தெரியவில்லை. விராட் கோலிக்காக யார் கோப்பையை வெல்ல நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும், நடப்பாண்டு உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. அனைவருமே நல்ல ஃபார்மில் உள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: AUS VS NZ: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா நியூசிலாந்து.. நாளை தர்மசாலாவில் பலப்பரீட்சை!