தர்மசாலா: நடப்பாண்டு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றத்தை சந்திதாலும், அதன்பின் அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளனர். இந்நிலையில், நாளை தனது 6வது போட்டியாக புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இவ்விரு அணிகளும் சந்தித்த போது, ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி தங்களது 5வது கோப்பையை உறுதி செய்தனர். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 183 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக கிராண்ட் எலியட் 83 ரன்களும், ராஸ் டெய்லர் 40 ரன்களும் எடுத்தனர். அதன்பின் களம் கண்ட ஆஸ்திரேலிய அணி அந்த இலக்கை துரத்த வெகு நேரம் எடுக்க வில்லை. அந்த அணி 33.1 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 754 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், இவ்விரு அணிகளும் நாளை தர்மசாலா மைதானத்தில் சந்திக்கிறது. நியூசிலாந்து அணி நடப்பாண்டு உலக கோப்பையில், விளையாடிய 5 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியது. பேட்டிங்கை எடுத்துகொண்டால் தொடக்க வீரரான டெவான் கான்வே நல்ல ஃபார்மில் உள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளனர். பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், மாட் ஹென்றி ஆகியோர் நல்ல நிலையிலேயே உள்ளனர். சூழற்பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னர் அணிக்கு பலமாக உள்ளார். காயம் காரணமாக இதுவரை பங்கேற்காத டிம் சவுதி இப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுமுனையில் தொடர் வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் நல்ல வெற்றியை பெற்றால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவர். அதேபோல் அரையிறுதிக்கு சிரமம் இல்லாமல் செல்லும் வாய்ப்பும் அவர்களுக்கு கிட்டும். தொடக்க வீரரான டேவிட் வார்னர் இதுவரை 2 சதங்களை விளாசி அற்புதமாக ஃபார்பில் உள்ளார். நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் பெரிதாக சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரில் களம் காணும் கிளென் மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் சதம் விளாசி உலக கோப்பையில் சாதனையை படைத்தார்.
பந்துவீச்சில் ஆடம் ஜம்பா விளையாடிய 5 போட்டிகளில் 13 விக்கெட்களை கைப்பற்றி நடப்பாண்டு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். சக பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசில்வுட் ஆகியோர் எதிரணிக்கு சவால் அளிக்கும் விதமாக உள்ளனர். சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதும் இப்போடியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
மோதும் அணிகள்: நியூசிலாந்து - ஆஸ்திரேலியா.
நேரம்: காலை 10.30 மணிக்கு.
இடம்: இமாச்சல பிரதேச கிரிக்கெட் மைதானம், தர்மசாலா.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ்(விகீ), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.
நியூசிலாந்து: டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (கேப்டன் & விகீ), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
இதையும் படிங்க: தனிநபரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும் - இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா!