இவ்வாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை டி-20 தொடருக்கு இந்திய அணியைத் தயார்படுத்த பிசிசிஐ தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ச்சியாக விளையாடி வரும் வீரர்களுக்கு ஓய்வளித்தும், பிளேயிங் 11ஐ செட் செய்யத் தகுதியான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கிலும் பிசிசிஐ உள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களை அடக்கிய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான ஜூனியர் வீரர்களை அடக்கிய அணி அயர்லாந்துக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடர் முடியும் தருவாயில் தென்னாப்பிரிக்காவுடனான டி-20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதில் சில புதுமுக வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. அப்போது ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கு மேல் அடித்த சஞ்சு சாம்ஸனுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் சஞ்சு சாம்ஸன் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் பிளேயிங் 11இல் இடம் அளிக்கப்படவில்லை. சீனியர் அணியில் தான் இடம் அளிக்கவில்லை; ஜூனியர் அணியிலும் 130-க்கும் மேற்பட்ட டி-20 போட்டிகளில் விளையாடிய அனுபவ வீரரான சஞ்சு சாம்ஸனுக்கு இடம் அளிக்க மாட்டீர்களா என அவரது ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு இந்திய அணியில் கால் தடம் பதித்த சஞ்சு சாம்ஸன் இதுவரை 13 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். விளையாட வாய்ப்பு கிடைத்த சில ஆட்டங்களிலும் சஞ்சு சாம்ஸன் 10..., 20.. ரன்களில் அவுட் ஆகி விடுவதால் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டு இருக்கிறார்.
13 ஆட்டங்களில் 12 இன்னிங்ஸில் சஞ்சு சாம்ஸன் மொத்தமாக 174 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் தனி நபர் அதிகபட்சம் 39 ரன்கள் மட்டுமே. இருப்பினும், சாம்ஸன் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடி விடுவதால் அணியில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்க ரசிகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நேற்று அயர்லாந்து அணியுடனான மோதலில் சஞ்சு சாம்ஸன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபக் ஹூடாவுக்கு அணியில் இடம் கிடைத்தது. இதற்கு அவரது ரசிகர்கள் JUSTICE FOR SAMSON என இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர். இது குறித்து முன்னாள் வீரர்கள் கூறுகையில், தீபக் ஹூடா ஆல் ரவுண்டர் என்பதால் சாம்ஸனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கலாம் என்றனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்து புறப்பட்ட மயங்க் அகர்வால் ! ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம்?