துபாய்: 20 ஓவர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. இதன் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, நாளை (ஆகஸ்ட் 28) தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வீரர் கே.எல்.ராகுல், "நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நாங்கள் எப்போதும் எதிர்நோக்கி உள்ளோம். இந்த போட்டி மிகவும் பரபரப்பானது. எங்கள் தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம்.
மேலும் இந்த போட்டியை புதிய அணுகுமுறையுடன் எதிர்நோக்க உள்ளோம். இது உலக கோப்பையின் முதல் ஆட்டம். இப்போது ஒருவரையொருவர் எதிர்கொள்ள மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நாங்கள் எப்போதும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறோம்” என கூறினார்.
தொடர்ந்து விராட் கோலியின் செயல்பாடு குறித்து பேசிய ராகுல், "ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து உள்ளது. இது விராட் போன்ற சிறந்த வீரர்களுக்கு இடையூறு செய்யாது. அவர் தனது விளையாட்டில் சிறந்து உழைக்கிறார். எனவே அவர் மீண்டும் தனது ஆட்டத்தை கொடுக்க மிகவும் உத்வேகத்துடன் இருக்கிறார்" என தெரிவித்தார்.
இதனையடுத்து போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ள ஷாஹீன் அப்ரிடி குறித்து ராகுல் கூறுகையில், "அவர் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம், ஆனால் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சை எதிர்கொள்ள, பேட்ஸ்மேன்களுக்கு அவர் களத்தில் இருப்பது எப்போதும் நல்லது. நாங்கள் அவரை இழக்கிறோம்" என கூறினார்.
இதையும் படிங்க: ஆசியக்கோப்பைத்தொடர்.. 100ஆவது சர்வதேச டி20 தொடரில் ஆடவுள்ள விராட் கோலி...