சிட்னி: 37 வயதாகும் ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர். சர்வதேச ஒருநாள் போட்டியில் 2009ஆம் ஆண்டும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011ஆம் ஆண்டும் ஆறிமுகமான இவர் 110 டெஸ்ட் போட்டிகளில் 26 சதங்கள் மற்றும் 36 அரைசதங்கள் உட்பட 8,651 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 161 ஒருநாள் போட்டிகளில் 22 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் உட்பட 6,932 ரன்கள் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் இவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் இவர் 5வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களுடன் முதல் இடத்திலும், ஆலன் பார்டர் 11,174, ஸ்டீவ் வாஹ் 10,927 மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 9,472 ரன்களுடன் முறையே 2, 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஏறகனவே கூறியிருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய வார்னர், "டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவில் உலகக் கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனை. அதேசமயம், 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது.
அதற்கு அழைப்பு விடுத்தால், நான் விளையாட தயார இருக்கின்றேன். அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன். மேலும், இந்த அறிவிப்பின் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2023-ஆம் ஆண்டின் கிரிக்கெட் நாயகர்கள்.. பேட் கம்மின்ஸ் முதல் விராட் கோலி வரை!