இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். அதன் பிறகு கடந்த வருடம் ஜூலை மாதம் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருப்பதால் மூன்று விதமான போட்டியில் கவனம் செலுத்த முடியாது எனக் கூறி ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதற்கு ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. உலக கோப்பை போட்டிக்கு முன் ஒவ்வொரு போட்டியையும் அனைத்து அணிகளும் முக்கியமானதாக கருத்தில் கொண்டு விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் தங்களது உலக கோப்பை அணியில் விளையாடவுள்ள வீரர்களை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.
இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம், ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களில் விளையாடவுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து அணியை பலப்படுத்தும் முயற்சியில் பென் ஸ்டோக்ஸை மீண்டும் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலக கோப்பை அணியில் ஸ்டோக்ஸ் கண்டிப்பாக இடம் பெறுவார் என கூறப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் முடிவு இங்கிலாந்து அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது. எனினும் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் ஜனவரி 2024 வரை இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போல பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் ஃஅப்ரிதி, வங்கதேச வீரர் தமீம் இக்பால் ஆகியோர் ஓய்வு முடிவை அறிவித்து விட்டு திரும்ப பெற்றுள்ளனர். பொதுவாக விளையாட்டு வீரர்கள் அணியின் நலன் கருதி ஓய்வு முடிவை திரும்ப பெறுவதுண்டு. ஆனால் வங்கதேச வீரர் தமீம் இக்பால் அந்நாட்டு பிரதமர் கேட்டு கொண்டதன் பேரில் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றது வித்தியாசமான முடிவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Buchi Babu Trophy: 114 ஆண்டுகள் பழமை வாய்ந்த புஜ்ஜிபாபு கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடக்கம்!!