சென்னை: பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "உறங்க முடியாத இரவுகளை ஏற்படுத்தியிருக்கிறது பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு விவகாரம். நான் அங்கு படித்த முன்னாள் மாணவர் என்பது மட்டுமில்லாமல், நான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்பதால்; என் மனம் பதறுகிறது.
ராஜகோபாலன் என்ற பெயர் மட்டும் தான் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், இது போன்று மேலும் பலர் ஊடுருவி இருக்கின்றனர். எனவே, இவை நிகழாமல் இருக்க, இம்மனநிலையுடன் இருப்பவர்களை களையறுக்கவேண்டும். மொத்த அமைப்புகளையும் சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை நான் அறிவேன். எனினும், பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து இதுபோன்ற பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். அதுவே வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நிகழாமல் தடுக்க உதவும்" என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கே.கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (59) மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து விசாரணை நடத்தவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பற்றிக்கொள்ள பிரச்னை பூதாகரமானது. பல தரப்பிலிருந்தும் ஆசிரியரை பணி நீக்கம் செய்து, விசாரணை மேற்கொள்ள நெருக்கடி கொடுக்கப்பட்டது. இப்பள்ளியின் அறக்காவலர் குழுவில் உள்ள ஒய்.ஜி. மகேந்திரனும் பள்ளி நிர்வாகத்திற்கு, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
உடனடியாக பிஎஸ்பிபி பள்ளியிலிருந்து ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் சிக்கியிருக்கும் ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை விசாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.