உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட பத்து அணிகள் கலந்துகொள்கின்றன.
இதற்கான வீரர்கள் பட்டியலை அனைத்து அணிகளும் கடந்த மாதமே அறிவித்துவிட்டன. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியும் தங்களின் பட்டியலை அறிவித்தது.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக ‘அதிரடி புயல்’, ‘சிக்ஸர் மன்னன்’ என தன் ரசிகர்களால் கொண்டாடப்படும் கிறிஸ் கெய்லை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த உலகக் கோப்பையோடு தான் ஒய்வு பெறுவதால், ‘இந்த உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாங்கித் தாருங்கள்’ என ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்களிடம் கிறிஸ் கெய்ல் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.