உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்குபெறும் இந்திய அணி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் உள்ள ஒரே மூத்த வீரர் என்றால் அது முன்னாள் கேப்டனான தோனி மட்டுமே ஆவார்.
இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தோனியின் பங்கு பெரியதாக இருக்கும். ஏனெனில் இந்திய அணியில் மேல் வரிசை வீரர்கள் பெரும்பாலும் சிறப்பான ஆட்டத்தையே ஆடக் கூடியவர்கள். இருப்பினும் அவர்கள் தவறும் பட்சத்தில், அவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்கும் தோனி அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் நிச்சயமாக முக்கிய பங்காற்றுவார்.
அதேபோன்று அவரது விக்கெட் கீப்பிங் திறமையை நாம் பலமுறை களத்தில் பார்த்திருப்போம். இதுதவிர இந்திய அணியை நீண்ட நாட்கள் வழி நடத்திய அனுபவமும், கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் தலைமையில் கோப்பையை கைப்பற்றிய அனுபவமும் உள்ளதால் அது இம்முறை மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
மேலும் கோலி பீல்டிங் சமயங்களில் பவுண்டரி கோட்டுக்கு அருகே இருக்கக் கூடும். எனவே, எப்போதும் ஸ்டெம்புகளின் அருகில் இருக்கும் தோனி பவுலர்களுக்கு அறிவுரை கூறுவதிலும், சில சிறிய பீல்டிங் மாற்றம் செய்வதும் அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் ஆடியுள்ள தோனி 358 ரன்கள் எடுத்து 142.62 என்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார். இந்த சீசனில் சென்னை அணி சில நேரங்களில் சரிவை சந்தித்தபோது தோனி ஒற்றை வீரராக களத்தில் நின்று ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார். எனவே உலகக்கோப்பை தொடரிலும் அவரின் இந்த அதிரடி ஆட்டம் வெளிப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உல்ளது.