மும்பை: 13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரரான டி காக் 4 ரன்களில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து களம் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நல்ல நிலையில் சென்று கொண்டு இருந்த ஆட்டத்தில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் - ரஸ்ஸி வான் டெர் டுசென் கூட்டணியை அடில் ரஷித் பிரித்தார். வான் டெர் டுசென் 60 ரன்களிலும், ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் எய்டன் மார்க்ரம் 42 ரன்கள், டேவிட் மில்லர் 5 ரன்கள் என ஒரு பக்கம் அவுட் ஆனாலும், மறுபக்கம் ஹென்ரிச் கிளாசென் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தால் சதத்தை எட்டினார். அவருக்கு உறுதுணையாக களத்தில் நின்ற மார்கோ ஜான்சனும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி அணியை எளிதாக 390 ரன்களை கடக்கச் செய்தது.
50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டாப்லி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆரம்பமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது.
ஜானி பேர்ஸ்டோவ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். ஜோ ரூட் 2 ரன், அதிரடி ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் 5 ரன், ஹாரி ப்ரூக் 17 ரன், கேப்டன் ஜாஸ் பட்லர் 15 ரன், டேவிட் வில்லி 12 ரன் என அடுத்தடுத்து ஆவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
ஒரு கட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 200 ரன்களை கடக்குமா என்ற அச்சம் நிலவியது. கடைசி கட்டத்தில் சிறிது ஆறுதல் அளிக்கும் விதமாக கஸ் அட்கின்சன் 35 ரன்னும், மார்க் வுட் 43 ரன்னும் எடுத்தனர். 22 ஓவர்கள் முடிவில் 170 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலக கோப்பை சீசனில் ஒரு அணி வென்ற அதிபட்ச வித்தியாசம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனைக்கு தென் ஆப்பிரிக்க அணி உரிமையாளராகி உள்ளது.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!