சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): 2019ஆம் ஆண்டில் இருந்து உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் உள்பட ஒன்பது அணிகள் இத்தொடரில் மோதின.
ஆனால், தொடரின் நடுவே கரோனா பரவலால் பல சுற்றுப் பயணங்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து, தொடரில் புதிய விதிகளை ஐசிசி அமல்படுத்தியது.
இதனால் பல சர்ச்சைகள் எழுந்த பின்னரும், இந்தியா - நியூசிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்போட்டி, வரும் ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிக்களுக்கு ஐசிசி பரிசுப்பொருள்களை அறிவித்துள்ளது. இதில், முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 11.72 கோடி ரூபாய்), இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு எட்டு மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 5.86 கோடி ரூபாய்) வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி சமனில் முடிந்தால், முதல் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 4.5 மில்லியன் டாலர்களும் (3.29 கோடி ரூபாய்), நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு 3.4 மில்லியன் டாலர்களும் (2.93 கோடி ரூபாய்) பரிசுத் தொகையாக வழங்கப்படும். ஐந்தாவது இடம் பிடிக்கும் அணிக்கு இரண்டு மில்லியன் டாலர்களும் (1.46 கோடி ரூபாய்) மற்ற அணிகளுக்கு தலா ஒரு மில்லியன் டாலர்களும் (73.31 லட்சம் ரூபாய்) பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூரோ 2020: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது செக் குடியரசு!