இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுதாம்படன் மைதானத்தில் வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கடுத்து, ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது. இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த வாரம் அறிவித்தது.
இரு அணிகளுக்கும் நடுநிலையான ஆடுகளமான இங்கிலாந்தில் விளையாட இருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில், நியூசிலாந்து, இந்தியா அணிகள் இருக்கின்றன.
விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியில், ஆறு வேகப்பந்துவீச்சாளர், மூன்று ஆல்ரவுண்டர்கள் என இங்கிலாந்தின் சூழலுக்கேற்பவே வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
பலம் பொருந்திய அணியா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளனர். நீண்ட நாட்களாக காயத்தினால் அவதிப்பட்டு வந்த உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின்போது 'குடல்வால் அழற்சி' எனும் அப்பெண்டிசைட்டிஸால் பாதிப்படைந்த முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் பயணத்திற்கு முன்னர் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பேட்டிங் வரிசையை பார்த்தோமானால் சுப்மன் கில், மயாங்க் அகர்வால் என அனுபவம் குறைந்த வீரர்கள் இருந்தாலும் ரோஹித், கோலி, புஜாரா, ரஹானே, விஹாரி ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களின் அணிவகுப்பு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என மூன்று சுழற்பந்து ஆல்ரவுண்டர்களை சுழற்சிமுறையில் கோலி பயன்படுத்துவார் என எதிர்பார்கக்ப்படுகிறது.
அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்,அர்ஜூன் நாகவாஸ்வாலா என நான்கு காத்திருப்பு வீரர்களையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர்களில் அபிமன்யு ஈஸ்வரனை தவிர்த்து மற்ற மூவரும் வேகப்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், புவனேஷ்வர் குமார், 'சைனாமேன்' சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக தமிழ்நாட்டு வீரர் நடராஜனும் அணியில் சேர்க்கப்படவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என நீண்ட சுற்றுபயணத்தை இந்திய அணி மேற்கொள்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களையே மண்ணைக்கவ்வ வைத்த அதே அணியைக் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் இந்தியா முத்தமிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட இந்திய ஆண்கள் அணி: விராட் கோலி(கேப்டன்), அஜிங்கயா ரஹானே (துணை கேப்டன்) ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, , ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ்,
கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா உடல்தகுதி நீருப்பிக்கப்பட வேண்டும்)
காத்திருப்பு வீரர்கள் (STANDBY PLAYERS): அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஸன் நாக்வஸ்வாலா
இதையும் படிங்க: ’நான் வலுப்பெற்று வருகிறேன்’ - காயத்திலிருந்து மீளும் நடராஜன்!