இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 12ஆவது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி 3.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகிற்கே கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த இங்கிலாந்து, ஐசிசி உலகக்கோப்பை தொடங்கிய 1975ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஒருமுறை கூட பட்டம் வென்றது இல்லை.
மூன்று முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணிக்கு இதுவரை உலகக்கோப்பை என்பது வெறும் கனவாகத்தான் இருந்துவருகிறது. கிரிக்கெட்டை தாய்வீடாக கொண்டுள்ள இங்கிலாந்து அணி 44 ஆண்டுகால தவத்தை பூர்த்தி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலாவது இங்கிலாந்து கோப்பையை வென்று அதனை உச்சி முகர்ந்து தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற ஆவலும் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து அணியைப் போன்றுதான் நியூசிலாந்து அணியும்! 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் பலமான அணியாக இருந்த நியூசிலாந்து, இறுதிப்போட்டியில் சொதப்பலான ஆட்டம், வெளிப்படையாகவே பதற்றத்தை வெளிக்காட்டிய வீரர்களின் செயல்பாடு ஆகியவை வெற்றிபெறும் வாய்ப்பை கோட்டைவிடக் காரணமாக அமைந்தது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கும் நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலகக்கோப்பையை எட்டி நின்று வேடிக்கை பார்க்காமல் பக்கத்தில் வைத்து முத்தமிட்டு அழகு பார்க்கவும் காத்திருக்கிறது.
முதன்முறையாக இரு அணிகளுமே உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைக்கும் முனைப்பில் இருப்பதால் இறுதி ஆட்டம் அனல் பறக்கும். வெல்லப்போவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.