2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா - தவான் ஜோடி தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் கோலி - ராகுல் ஜோடி, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தும் என்று ராகுல் அடித்த அற்புதமான பவுண்டரியால் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொள்ள வைத்தது. அடுத்த இரண்டாவது பந்தில் போல்டாகி ராகுல் வெளியேறினார்.
![போல்ட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3383054_bolt.jpg)
பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த கோலி, ஸ்கோரை நிதானமாக உயர்த்தினார். தொடர்ந்து ஆடிய கோலி, கிராண்ட்ஹோம் பந்தில் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களத்தில் இறங்கிய தல தோனி, தடுப்பாட்டத்தால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார். மறுமுனையில் ஹர்திக் அதிரடியாக ரன்களை குவித்தார்.
இதனையடுத்து ஹர்திக் பாண்டியா 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த தினேஷ் கார்த்திக் 4 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பி அதிர்ச்சியளித்தார். அடுத்த களமிறங்கிய ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் சவுதியின் பந்தில் தோனி 17 ரன்களில் ஆட்டமிழந்து, இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்தார்.
![நியூசிலாந்து அணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3383054_icc.jpg)
பிறகு தோனி போனால் என்ன.. நான் இருக்கிறேன் என்று கத்திவீசும் ஜடேஜா தனது அதிரடியான பேட்டிங்கால் இந்தியாவின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். இவருக்கு உறுதுணையாக குல்தீப் யாதவ் சிறப்பாக ஆடினார். ஜடேஜா அரைசதம் கடந்தவுடன் அதிரடியாக ஆடியபோது எதிர்பாராதவிதமாக 54 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து குல்தீப் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 39.2 ஓவர்களில் 179 ரன்களை எடுத்தது. நியூசி. சார்பாக போல்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.