உலகக்கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி அடைந்த தோல்வியால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
முக்கியமாக தோனியின் வயது குறித்து பேசப்பட்டு வந்த சூழலில், அவராகவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க இயலாது என விலகிக்கொண்டார். இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என கருதப்பட்டது.
இந்நிலையில் மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, கலீல் அஹ்மத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் பங்கேற்ற வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 'தங்க சுரங்கம்' ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளதால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேபோல் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மயங்க் அகர்வால் டெஸ்ட் அணிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி இல்லாததால் விக்கெட் கீப்பர் பொறுப்பு முழுவதும் இளம் வீரர் ரிஷப் பண்ட் கைகளுக்குச் சென்றுள்ளது.
உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி தன்னை விடுவித்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடிய சுப்மன் கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டு காயத்தால் விலகிய ப்ரித்வி ஷா ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை. டெஸ்ட் அணியில் சஹா அணிக்கு திரும்பியுள்ளதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பிறகாவது கோலி திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கோலியின் மனதிற்கு பிடித்த வீரர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.