உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 18ஆவது லீக் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கம் என கருதப்படும் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் இந்தத் தொடரில் ஒரு தோல்வியை சந்திக்காமல் வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மறுமுனையில், இந்திய அணி விளையாடிய இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது.
இதுமட்டுமில்லாமல், உலகக்கோப்பையில் இவ்விரு அணிகளும் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் மோதியதில், நியூசிலாந்து அணி நான்கு முறையும், இந்திய அணி மூன்று முறையும் வெற்றிபெற்றுள்ளன. இறுதியாக இவ்விரு அணிகளும் 2003இல்தான் மோதின. இதில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதனால், 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.