12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. சவுதாம்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 63 ரன்களை விளாசினார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும், ஜோ ரூட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 213 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பெய்ர்ஸ்டோவ், வோக்ஸ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதனால், இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 213 ரன்களை எட்டியது. இதன் மூலம், இங்கிலாந்து அணி இப்போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தபோது, இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய்க்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு பதிலாக ஜோ ரூட் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தை அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். இப்போட்டியில், பவுலிங்கில் இரண்டு விக்கெட், பேட்டிங்கில் சதம் என ஆல்ரவுண்டராக ஜொலித்த இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.