2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை ’அண்டர்டாக்ஸ்’ என சமீபகாலமாக அழைக்கப்படும் இலங்கை அணி எதிர்க்கிறது.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில், தொடக்க வீரர்கள் கப்தில், மன்ரோ ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருப்பதால் எதிரணியினருக்கு அச்சுறுத்தல் கொடுப்பர். அதேபோல் நியூசிலாந்து அணியின் நடுவரிசை மிகவும் வலிமையாக உள்ளது. வில்லியம்சன், ராஸ் டெய்லர், நீஷம், நிக்கோலஸ் என மிகப்பெரிய பந்துவீச்சு கூட்டணிக்கு சவாலளிக்கும்.
ராஸ் டெய்லருக்கு சிறிது நேரம் இடம் கொடுத்தாலும் இலங்கை அணி வெற்றிக்கு டாடா காட்டிவிட்டு நியூசிலாந்து அணியின் மடியில் சென்று அமர்ந்துகொள்ளும். பந்துவீச்சில் போல்ட், சவுதி, பெர்குசன், சாண்ட்னர், சோதி என தங்களின் திறமையைக்காட்ட காத்துக் கொண்டிருக்கிறார்கள். பயிற்சி போட்டியில் இந்தியாவுக்கு பாடம் எடுத்த போல்ட், மற்றொரு மிகப்பெரிய ஆட்டத்தை காட்ட காத்திருக்கிறார்.
இலங்கை அணியைப் பொறுத்தவரையில் கடந்த 2007, 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அணி, தற்போது வங்கதேச அணியிடம் அடி வாங்கிவருகிறது. இதனால் அண்டர்டாக்ஸ் அணிகளின் பட்டியலில் இணைந்துள்ள இலங்கை அணி, இந்த உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்குவது முக்கியமானது.
திரிமன்னே, கருணரத்னே, குசல் பெரேரா, மேத்யூஸ் ஆகியோர் பயிற்சி போட்டிகளில் ஆடிய ஆட்டத்தை தொடர வேண்டும். மலிங்காவின் தற்போதைய ஃபார்ம் இலங்கை அணிக்கு மிகப்பெரிய வரமாக உள்ளது. மலிங்காவின் பந்து வீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணற வாய்ப்புள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதையடுத்து இலங்கை அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் எழுச்சிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு உலகக்கோப்பை தொடரே சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளனதை இலங்கை அணி பயன்படுத்திக்கொள்ளுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எற்பட்டுள்ளது.
இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் இந்த இருஅணிகளும் ஆடிய 10 போட்டிகளில் 6ல் இலங்கையும், நான்கில் நியூசிலாந்தும் வென்றுள்ளது. பயிற்சி போட்டிகளில் மிகப்பெரிய ரன்கள் கார்டிஃப் மைதானத்தில் அடிக்கப்பட்டுள்ளதால் இன்றும் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.