உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது. அதிலும் முக்கியமாக இங்கிலாந்து - இலங்கை அணிகள் ஆடிய கடந்த போட்டிக்கு பிறகு உலகக்கோப்பைத் தொடரின் பரபரப்பு டாப் கியருக்கு எகிறியது.
இன்றையப் போட்டியில் கிரிக்கெட்டின் பரம வைரிகளாக பார்க்கப்படும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இந்தத் தொடருக்கு முன்னதாகவே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டிக்குதான் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில், தொடரின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி கெத்தாக ஆரம்பித்தாலும் அடுத்தப் போட்டியிலேயே பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கு இரையானது. இதனைடுத்து கத்துக்குட்டி அணிகளை புரட்டி எடுத்து தாங்கள் வலிமையான அணி என ரசிகர்களுக்கு பறைசாற்றினாலும், இலங்கை அணியின் எதிர்பாராத பதிலடிக்கு மிதிபட்டு, தற்போது அரையிறுதி வாய்ப்புக்கே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
முதலில் வலிமை குறைந்த அணிகளை வீழ்த்திவிட்டு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடலாம் என எண்ணிய இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
வலிமை குறைந்த அணிகளுடன் விளையாடும் ஆறு போட்டிகளிலும் நாம் வென்றுவிடலாம் என்ற கனவுகண்ட இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தானும், இலங்கையும் தோல்வியை பரிசளித்தன. அடுத்த மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளோடு விளையாட வேண்டுமென்பதால், இங்கிலாந்து ரசிகர்கள் தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் ஃபின்ச், வார்னர், கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் என அதிரடிக்கும், மிரட்டலான ஆட்டத்துக்கும் பெயர் பெற்றிருந்தாலும் பந்துவீச்சில் தொடர்ந்து பரிதாபமான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், எகானாமியில் அவர்களின் பாடு திண்டாட்டமாகத்தான் உள்ளது. காத்து மட்டும்தான் வருது என்பதுபோல் பவுன்சர் மட்டும்தான் வருது என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.
இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கும் இதே நிலைதான். முழுக்க முழுக்க ப்ளாட் ட்ராக்குகளில் மட்டும் அடித்துவிட்டு, பந்துவீச்சில் ஆர்ச்சரை மட்டும் நம்ப வேண்டியுள்ளது. ஆர்ச்சரையும் இலங்கை பேட்ஸ்மேன் ஃபெர்னாண்டோ வெளுத்து வாங்கியதையடுத்து, இன்று எவ்வாறு வீசுவார் என ஆவலாக காத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். உலகக்கோப்பைத் தொடரில் முக்கியமான ஆட்டமாகக் கருதப்படும் இந்தப் போட்டி கிரிக்கெட்டின் மெக்கா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.