2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசி. 46.1 ஓவர்களில் 211 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடியபோது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.
இதனால் உலகக்கோப்பைத் தொடர்களில் ரிசர்வ் நாளின்போது இந்திய அணி விளையாடிய போட்டிகள் குறித்து இணையதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக 1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி ரிசர்வ் நாளில் ஆடிய ஆட்டம் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அன்றையப் போட்டியில் என்ன நடந்தது:
கங்குலியின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணி இலங்கையை வென்றதையடுத்து, இங்கிலாந்து ஆணியை எதிர்கொள்ள இருந்தது. அதேபோல், இங்கிலாந்து அணியும் ஜிம்பாப்வே அணியை வென்றதையடுத்து, இந்தியாவிடம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடயே அதிகரித்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெக்ஸ் ஸ்டிவர்ட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடர்ந்து கங்குலி - சடகோபன் ரமேஷ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தபோது சடகோபன் ரமேஷ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிராவிட் - கங்குலி இணை நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டது.
சிறப்பாக ஆடிய கங்குலி 59 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த சச்சின் 22 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ரசிகர்களிடயே பதற்றம் ஏற்பட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் டிராவிட் 82 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்தார். கேப்டன் அஸாருதீன் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த அஜய் ஜடேஜா வழக்கம்போல் அதிரடியாக ஆடி 39 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்ட்வர்ட் 2 ரன்னிலும், கிரீம் ஹிக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது. பின்னர் இணைந்த நாசர் ஹுசைன் - தோர்ப் ஜோடி இங்கிலாந்து அணியை மீட்டது.
பின்னர் ஹுசைன் 33 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் நெய்ல் களமிறங்கினார். இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது 20.3 ஓவர்களில் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
யார் வேண்டுமென்றாலும் இந்த போட்டியில் வெல்லலாம் என்கிற நிலையில், ஆட்டம் மறுநாள் மாற்றப்பட்டது ரசிகர்களிடயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அடுத்தநாள் காலை தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டிங்கைத் தொடர, முன்தினம் பெய்த மழையால் ஆட்டம் பவுலிங்கிற்கு சாதகமாக அமைந்தது.
இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் வெங்கடேஷ் பிரசாத், கும்ப்ளே, ஸ்ரீநாத், கங்குலி ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து வீரர்களோ மித வேகப்பந்துவீச்சாளரான கங்குலியிடம் சிக்க சின்னபின்னமாகினர். நைல் பார்பிரதர் 29 ரன்களிலும், பிளிண்டாஃப் 15 ரன்களிலும் வெளியேற இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியாக 45.2 ஓவர்களில் 169 ரன்கள் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ஆட்டநாயகனாக 40 ரன்களும், 3 விக்கெட்டுகளும் வீழ்த்திய கங்குலி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று நடைபெறும் அரையிறுதி:
இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்திலும் மழை குறுக்கிடவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேலை தொடர்ந்து மழை குறுக்கிட்டால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
ஆனால் ஆட்டம் நடைபெற்றால், மைதானத்தில் மழை பெய்ததுள்ளதால் பவுலிங்கிற்கு சாதகமான சூழல் நிலவும் என்பது உறுதி. நியூசிலாந்து வீரர்களான ஃபெர்குசன், போல்ட், சாண்ட்னர் ஆகியோரிடம் இந்திய அணி டாப் ஆர்டர் சரிந்தால் ஆட்டத்தின் முடிவு இந்திய அணிக்கு சாதகமில்லாமல் மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.
அதேபோல், ஆட்டத்தில் நடுவரிசையில் தினேஷ் கார்த்திக், தோனி, ஜடேஜா ஆகியோர் இணைந்திருப்பதால் இந்திய அணி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ரிசர்வ் நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியதைப் போல் இன்றும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்களிடயே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.