இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர், ஜாகிர் கான். மேலும் இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி, உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லக்ஷ்மண், தனது ட்விட்டர் பதிவில் ஜாகிர் கானை புகழ்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பெரிய கனவுகளைக் காணத் துணிந்து, அதில் வெற்றியையும் கண்டவர், ஜாகிர் கான். சிறுகிராமமான ஸ்ரீராம்பூரிலிருந்து வந்து, தனது திறமையினால் புகழின் உச்சியைச் சென்றடைந்தவர். இந்தியா மட்டுமல்லாமல், கவுண்டி கிளப் அணியான வொர்செஸ்டரிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். இது அவரின் மனவலிமைக்கு கிடைத்த அங்கீகாரம்' என்று தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆவது ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வந்த ஜாகிர் கான், இதுவரை 300க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.