பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளரான, இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் வூல்மர் காலமாகி நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்தன. இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கிய வூல்மர், அதன்பின் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டுவந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்ததார். அத்தொடரில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்து அணியுடனான முக்கியமான போட்டியில் படுதோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது.
அதற்கு அடுத்த நாள் பாப் வூல்மர், தனது ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக செய்திகள் பரவத்தொடங்கி கிரிக்கெட் உலகில் பேரதிர்வுகளை உருவாக்கியது. இச்சம்வம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இண்டர்போல் அமைப்பு விசாரணை மேற்கொண்டது. பின் உடற்கூறாய்வில் வூல்மர் நீரழிவு நோயால் இறந்தது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கானது முடிவுக்கு வந்தது.
தற்போது பாப் வூல்மர் இறந்து 13 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரை பயிற்சியாளராக கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் புகழஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனீஸ் கான் தனது ட்விட்டரில், ‘அன்புடைய பாப், 13 வருடங்களுக்கு முன் நாங்கள் உங்களை இழந்தோம், ஆனால் நேற்றைய தினம் எனது நினைவுகளில் பெரும் புன்னகையுடன் நீங்கள் இன்றும் வாழ்கிறீர்கள். எனது கிரிக்கெட் வாழ்கையில் அனைத்து வித வெற்றிகளுக்கும் காரணமானவர் நீங்கள் தான். ஏனெனில் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதைத் தான் நான் இங்கு செய்துள்ளேன். உங்களைப் பயிற்சியாளராக கொண்டதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சாமுல் ஹக், தனது யூ டியூப் காணொலியில், ‘வூல்மர் பயிற்சியாளராக இருந்த காலத்தில்தான் நானும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றேன். அதனால் மற்ற வீரர்களை தாண்டி அதிக நேரங்களை நான் அவருடன் செலவிட்டுள்ளேன். அது என்றும் நினைவை விட்டு நீங்காதது. அவரிடமிருந்து நிறைய அனுபவங்களை நான் பெற்றுள்ளேன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாகவுள்ளது. அவருடைய ஆன்மா நிம்மதியடையட்டும்’ என பதிவிட்டுள்ளார்.இதையும் படிங்க:‘ஸ்டம்புகளுக்கு பின்னால் தோனி ஒரு மிகப்பெரும் சொத்து’ - வாசிம் ஜாஃபர்