ஐசிசி முடிவால் சாம்பியனான இங்கிலாந்து
இந்தியா, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா 12ஆவது உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைய, மறுமுனையில் இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றாத இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 241 ரன்களைக் குவிக்க, பின்னர் இங்கிலாந்து அணி அதே ரன்களை எடுத்ததால், உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் டையில் 15-15 என்ற ரன்கள் கணக்கில் சமனில் முடிந்ததால், பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இங்கிலாந்து அணியின் 44 ஆண்டுகால கனவு அதன் சொந்த மண்ணிலேயே நிறைவேறியது. ஐசிசியின் இந்த முடிவு பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், அந்த விதிமுறையை மாற்றியமைப்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் சர்ச்சைகள்
மக்களவைத் தேர்தலுக்கு இடையே ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசனில் வழக்கத்தைவிட இந்தாண்டு சில சர்ச்சைகள் அரங்கேறின. நடுவர்களின் நோபால் அலட்சியம், அஸ்வினின் மான்கட் சர்ச்சை, ஆட்டத்தின் இடையே தோனி களமிறங்கி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என வரிசையாகப் பல குளறுபடிகள் நிகழ்ந்தன.
இதையடுத்து, இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி மும்பை அணியிடம் ஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்டது. இதன்மூலம் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
71 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நிகழ்த்திய சாதனை
2019ஆம் ஆண்டை இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கியது. 2018-19இல் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம், 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற சாதனையை இந்திய அணி படைத்தது.
ஆஷஸில் அசத்திய ஆஸ்திரேலியா
உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் மீண்டும் ரசிகர்களுக்கு கிரிக்கெட் ஃபீவர் வரத் தொடங்கியது இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்துதான்.
இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்ற மிகப்பழமையான இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக இருந்தது. முதல் போட்டியிலும் நான்காவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
இறுதியில், ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1972-க்கு பிறகு 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இருப்பினும், 2017 ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றதால், இம்முறை ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக்கொண்டது.
உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்தாண்டு நடைபெற்ற இரண்டு முக்கியமான தொடர்களில் துருப்புச் சீட்டாக இருந்தார். காரணம் அவர் நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை பைனலில் விக்கெட்டுகள் சரிந்தபின் 84 ரன்கள் விளாசியது மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் தனது அசாதாரண பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், தனி ஒருவனாக 135 ரன்கள் விளாசி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் திரில் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
ஸ்டீவ் ஸ்மித்தின் கம்பேக்!
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 774 ரன்கள் குவித்து தொடர்ச்சியாக மூன்று முறை 500-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார்.
ஆஷஸ் தொடரின் தொடக்கத்தில் ஸ்மித்தை கேலி செய்த அதே இங்கிலாந்து ரசிகர்களே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது எழுந்துநின்று கைதட்டினர். இது அவரது விளையாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதோடு, கம்பேக் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது.
உலகக்கோப்பை நாயகன் ஓய்வு
இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை ஒருநாள் தொடர் என இரண்டு உலகக்கோப்பைகளை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், 2019 ஜூன் 10ஆம் தேதிதான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
அவரது முடிவு ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தாலும், அதன்பின் கனடா டி20 தொடர், சவுதி அரேபியா டி10 தொடர் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்றார் யுவராஜ் சிங்.
தோனியின் ராணுவப் பயிற்சி
உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி ஓய்வுபெறுவார் என்று கூறப்பட்டது. இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தவுடன் தோனி ஓய்வுபெறுவாரா என்ற சந்தேகத்தில் அவரது ரசிகர்கள் இருக்க, அவரோ பாராசூட் ரெஜிமென்ட்டின் பிராந்திய ராணுவப் படைப்பிரிவுடன் இரண்டு மாதங்கள் பயிற்சி மேற்கொண்டார்.
இவர் இனி விளையாடுவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தோனி ராணுவத்தின் மீதான தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. தோனியின் இந்த முடிவுக்கு கம்பிர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் அப்லாஸ் செய்தனர்.
தலைவன் இருக்கிறான் - தாதா பராக்!
மேட்ச் ஃபிக்ஸிங், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் 2000-த்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருளிலிருந்த இந்திய கிரிக்கெட் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டு, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு கிடைத்த தன்னிகரில்லா தலைவன் கங்குலிதான், 19 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டில் இக்கட்டான சூழ்நிலையிலிருந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தை மீட்க அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், அக்டோபர் 23ஆம் தேதி ஏகமனதாக பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ஆளுமையான இவர், பிசிசிஐ தலைவரானதில் ரசிகர்களைத் தாண்டி வீரர்களும் மகிழ்ச்சியடையந்தனர். அவர் அடித்த முதல் பந்தே சிக்சர்தான்!
முதல் பிங்க் பால் டெஸ்ட்... கங்குலியின் முதல் சிக்சரும் கூட
இந்த தசாப்தத்தில் கிரிக்கெட் போட்டிகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதைப் போல, டெஸ்ட் கிரிக்கெட்டை புதுப்பிக்கும் வகையில், ஐசிசி 2015ஆம் ஆண்டிலிருந்து பிங்க் பால் டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தியது.
பல அணிகள் இப்போட்டியில் விளையாடிவந்த நிலையில், பிசிசிஐ மட்டும் இதற்கு மறுப்பு தெரிவித்துவந்தது. ஆனால், கங்குலியின் வருகைக்குப் பிறகே இது சாத்தியமானது. இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நவம்பர் 22ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் பல மறக்க முடியாத தருணங்கள் அரங்கேறின.
இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு ரூ. 50, 100, 150 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ரசிகர்களும் பிங்க் பால் போட்டிக்கு ஆதரவு தர இப்போட்டி டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என்ற அளவிற்கு கூட்டம் மைதானத்தில் இருந்தது.
இந்திய அணி இப்போட்டியில் இன்னிங்சை வெற்றிபெற்று மூன்று நாள்களிலேயே இப்போட்டி முடிந்தாலும், இது இந்திய அணிக்கு கிடைத்த சரித்திர தொடக்கம்தான். ஏனெனில் இது இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட்... கங்குலியின் முதல் சிக்சரும்கூட.
இனி அதிகமான பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட வேண்டும் என்று கங்குலி தெரிவித்திருந்தார். இதனிடையே 2020இல் தங்களுடன் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடுமாறு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், முன்னாள் வீரர் ஷேன் வார்னே ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
டிம் பெய்ன், வார்னே ஆகியோரின் ஆஃபர்களை கோலியும் தாதாவும் ஏற்றுக்கொள்வார்களா என்பது 2020இல் தெரிந்துவிடும்.
ஹிட்மேனின் உலகக்கோப்பை சாதனை
2019இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், ஹிட்மேனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இது மறக்க முடியாத உலகக்கோப்பைதான்.
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை என ஒவ்வொரு அணியுடனும் சதமடித்து, மொத்தமாக ஒரு உலகக்கோப்பைத் தொடரில் அதிக சதமடித்த இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககராவின் சாதனையை ரோஹித் முறியடித்தார்.
இதே ஃபார்முடன் தொடர்ந்து விளையாடிய இவர், அனைத்துவிதமான போட்டிகளிலும் ஒரே ஆண்டில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், உலகக்கோப்பையில் அவர் படைத்த சாதனைதான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சாதனைகளுக்கு மேல் சாதனைபுரிந்த கிங் கோலி!
கிரிக்கெட்டில் இந்த தசாப்தத்தை (2010-2019) திரும்பிப்பார்த்தால், இந்திய அணியின் கேப்டன் கோலி பெயர்தான் நமக்கு முதலில் ஸ்டிரைக் ஆகும். அந்த அளவிற்கு அவரது சாதனைகள் பேசப்படுகின்றன.
குறிப்பாக ஒரு தசாப்தத்தில் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலும் 20 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை 2019இல் கோலி எட்டினார். இதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் வேகமாக 11 ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற மற்றொரு சாதனையையும் அவர் உலகக்கோப்பைத் தொடரின்போது எட்டினார்.
பேட்டிங் மட்டுமல்லாது கேப்டன்ஷிப்பிலும் புதிய மைல்கல்லை எட்டினார். குறிப்பாக, அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மீண்டும் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான குழுவால் தேர்வுசெய்யப்பட்டார். அதன்படி அவரது ஒப்பந்தம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
வங்கதேச நாயகன் ஷகிப்பிற்கு 2 ஆண்டு தடை
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், ஐசிசியின் ஊழல் தடுப்பு குற்றச்சாட்டில் சிக்கினார்
இதன் விளைவாக அவருக்கு ஐசிசி இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது. அதில், போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை என்றும், ஓராண்டு இடைநீக்கம் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இவர் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி - பேக் டூ பேக் தோல்வி
2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு அணி உள்ளூர் போட்டிகளில் அதே டெய்லர் அதே வாடகை போன்று இரண்டுமுறை ஃபைனலில் கர்நாடகாவிடம் தோல்வியுற்றது.
முதலில் விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடக வீரர் அபிமன்யு மிதுனின் பந்துவீச்சு தமிழ்நாடு அணியின் தோல்விக்கு காரணம். இறுதிப் போட்டியில் அபிமன்யு ஹாட்ரிக் விக்கெட் எடுக்க, தமிழ்நாடு பேட்டிங்கில் வலுவிழந்தது.
சையத் முஷ்டாக் அலி தொடரின் கடைசி பந்தில் மூன்று ரன்கள் தமிழ்நாடு அணிக்குத் தேவை. கிருஷ்ணப்பா கவுதம் வீசிய கடைசிப் பந்தில் முருகன் அஸ்வின் ஒரு ரன் மட்டுமே எடுக்க, தமிழ்நாடு அணி ஒரு ரன்னில் அதிர்ச்சி தோல்வியுற்றது.
தமிழ்நாட்டு கிரிக்கெட்டுக்கு இருண்ட ஆண்டு 2019
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு வீரருமான வி.பி. சந்திரசேகரின் மறைவு 2019ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர், தமிழ் வர்ணனையாளர் என பன்முகம் கொண்ட இவர், டிஎன்பிஎல் தொடர் நடைபெற்றுவந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. அதற்கான காரணம் இன்றளவும் தெரியவில்லை.
57 வயதான இவர், ஐபிஎல் தொடரின் முதல் மூன்று சீசன்களில் சென்னை அணியின் மேலாளராக இருந்தார். இவரால்தான், ஐபிஎல் ஏலத்தில் தோனி முதன்முதலில் சென்னை அணிக்கு ஒப்பந்தமானார்.
மித்தாலி ராஜ் ஓய்வு?
இந்திய மகளிர் அணியின் சச்சின் என்று அழைக்கப்படும் மிதாலி ராஜ், 2019 செப்டம்பர் மாதத்தின்போது, தான் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக இதுவரை 89 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களைக் குவித்தார் மிதாலி.
அதில் 32 போட்டிகளில் அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிதாலி ராஜின் ஓய்வால் 15 வயது இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
சச்சினின் சாதனையை முறியடித்த 15 வயது வீராங்கனை
இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடித்த இந்திய வீரர் சச்சினின் 30 வருட சாதனையை, 15 வயது இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா முறியடித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக செயின்ட் லூசியாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அவர் 49 பந்துகளில் 73 ரன்கள் அடித்ததன் மூலம் இச்சாதனையை எட்டினார்.
1989இல் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் அரைசதம் அடித்தபோது அவரது வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.
கே.பி.எல்லில் மேட்ச் பிக்ஸிங் - டிஎன்பிஎல்லில் சூதாட்டம்
2019 கர்நாடக ப்ரீமியர் லீக் டி20 தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இதில், ஹுப்ளி டைகர்ஸ் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சி.எம். கவுதம், அப்ரார் கஸி ஆகியோர் ரன்கள் எடுக்காமல் மெதுவாக விளையாடுவதற்காக 20 லட்சம் பெற்று மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 2019 ஆகஸ்டில் நடைபெற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கின் நான்காவது சீசனில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனிடையே, டூட்டி பேட்ரியாட்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சர்வதேச சூதாட்ட தளத்தில் ரூ. 225 கோடி சூதாட்டம் நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு மூலம் தகவல் வெளியானது.