இந்திய அணியின் முன்னாள் வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கீர்த்தி ஆசாத், 2000ஆவது ஆண்டு டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தேர்வாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தவுள்ளதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து கீர்த்தி ஆசாத் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கீர்த்தி ஆசாத், “நான் தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன். தேசிய கிரிக்கெட் தேர்வு தலைவராக இருந்த சமயத்தில் கவுதம் கம்பீர், ஷிகர் தவான் போன்ற திறமையான வீரர்களை அணியில் அறிமுகம் செய்து வைத்தேன். அதனால் மீண்டும் திறமையான வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என இப்பதவிக்கு போட்டியிடுகிறேன்.
இதுகுறித்து எனது 'கேப்டன்' பிஷன் சிங் பேடி மற்றும் கிரிக்கெட் பிரியர்களிடன் ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும் ரெஹானை எனது மகனை போலவே நடத்துகிறேன். ஏனெனில் அவர் ஒரு திறமையான இளைஞர். டெல்லி கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
கீர்த்தி ஆசாத் பாஜக சார்பில் பிகார் மாநிலம் தர்பாங்கா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வானவர். இவர், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை பகிரங்கமாக விமர்சனம் செய்ததால், பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ராகுல் காந்தியின் முன்னிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பயிற்சி ஆட்டத்தில் சதமடித்தது எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது - ரிஷப் பந்த்