மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இந்திய அணி உலகக்கோப்பையைப் பறிகொடுத்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு அதிரடி வீராங்கனை அலிசா ஹீலி முக்கிய காரணமாக இருந்தார். அவர் 39 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தில் பெரும் சாதகத்தை ஆஸி.க்கு ஏற்படுத்தியது.
ஆனால் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹீலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷஃபாலி வர்மா தவறவிட்டார். அதேபோல் பெரிய இலக்கை விரட்டும்போது தொடக்க வீராங்கனைகள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதிலும் ஷஃபாலி கோட்டைவிட்டார். இதனால் ஷஃபாலி வர்மா மீது ரசிகர்கள் சில விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதுகுறித்து இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசுகையில், ''ஷஃபாலி வர்மாவின் வயது 16 மட்டுமே. இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவையனைத்தையும் ஷஃபாலி வர்மா செய்துள்ளார்.
இந்த ஆட்டம் அவருக்கு ஒரு நல்ல படிப்பினையாக இருக்கும். தோல்வியின்போது யாரையும் குற்றம் கூறக்கூடாது. இந்தத் தோல்விக்கு பலரும் காரணமாக இருக்கிறோம்.
ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு சில வாய்ப்புகளை நாங்கள் வழங்கிவிட்டோம். அதிலிருந்து அவர்கள் மீண்டும் ஆட்டத்தில் வந்துவிட்டபோது, பந்துவீச்சாளர்கள் அவர்களை வீழ்த்துவது கடினமான ஒன்று. ஃபீல்டிங்கின்போது எங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்த வேண்டும்.
இந்த ஆட்டத்தை விட 2017ஆம் ஆண்டில் அடைந்த தோல்விதான் எங்களுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் வெற்றிக்கு மிகவும் அருகில் சென்று தோல்வியடைந்தோம். இளமையான இந்திய அணி லீக் சுற்றுகளில் சிறப்பாக ஆடியது. இதேபோல் தொடர்ந்து உழைத்தால் விரைவில் கோப்பையைக் கைப்பற்றுவோம்.
நாங்கள் இன்று சரியாக ஆடவவில்லை. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என இந்தப் போட்டி அறிவுறுத்தியுள்ளது. எந்த அளவில் கிரிக்கெட் ஆடினாலும் கேட்ச்களை கோட்டைவிடக்கூடாது. அடுத்த முறை இந்திய அணியைப் பார்க்கும்போது சிறந்த ஃபீல்டிங் அணியாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: கெத்து காட்டிய ஆஸி., சரணடைந்த இந்தியா... #PhotoStory