ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 17ஆவது லீக் போட்டி இன்று மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின.இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியானது.
இதனால், இன்றைய கடைசி போட்டியில் எந்த அணி ஆறுதல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, இப்போட்டியுடன் தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வீராங்கனை சசிகலா சிறிவர்தனே தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக நிகர் சுல்தானா 39 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் சசிகலா சிறிவர்தானே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 15.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீராங்கனை ஹசினி பெரேரா 39 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதனால், இலங்கை அணி இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீராங்கனை சசிகலா சிறிவர்தனே ஆட்டநாயகி விருதுடன் தனது 17 வருட கிரிக்கெட் பயணத்திலிருந்து விடைபெற்றார். இலங்கை அணிக்காக 118 ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் 3,577 ரன்களும் பவுலிங்கில் 124 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுபோல 75 டி20 போட்டிகளில் 1,499 ரன்களும், 70 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸை 3-0 வொயிட் வாஷ் செய்த இலங்கை!