கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்தில் இம்மாத இறுதியில் புதிய கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. ‘தி ஹண்ட்ரட்’ என்றழைக்கப்படும் இந்த போட்டிகளில் வெறும் நூறு பந்துகள் மட்டுமே வீசப்படும். இந்த தொடரில் விளையாடும் எட்டு அணிகள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
மேலும், இந்த தொடரில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச வீரர்களின் பெயர் பட்டியலும் நேற்று வெளியானது. அந்தப் பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனின் பெயரும் இடம்பிடித்துள்ளதாகவும், அவருக்கு ரூ. 87 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அவரால் இந்த போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் பிசிசிஐ விதிகளின்படி ஓய்வு பெறாத வீரர் ஒருவர் வெளிநாட்டு தொடரில் பங்கேற்க முடியாது.
இந்திய அணியில் ஆஸ்தான ஸ்பின்னராக இடம்பிடித்திருந்த ஹர்பஜன் சிங் கடைசியாக 2016ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்காமல் உள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மட்டும பங்கேற்ற ஹர்பஜன் சிங் தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்காமல் இருந்துவருகிறார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.எனவே தற்போது இங்கிலாந்தின் புதிய தொடரில் பங்கேற்பதற்காக அவர் ஓய்வை அறிவிக்கக்கூடும் என்ற தகவல் பரவியுள்ளது.
முன்னதாக ஹர்பஜனின் நண்பரும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமுமான யுவராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் கனடா குளோபல் டி20 தொடரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.